1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 மார்ச் 2025 (12:56 IST)

திமுக கொடிக்கம்பங்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்: துரைமுருகன் உத்தரவு

flag
தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்ட திமுக கொடி கம்பங்களை அடுத்த 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என திமுகவினர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி, மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜனவரி 27ஆம் தேதி உத்தரவிட்டது.
 
அந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த தீர்ப்பை கடந்த ஆறாம் தேதி உறுதி செய்தது.
 
எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களிலும் பொது இடங்களிலும் வைத்துள்ள கழக கொடி கம்பங்களை மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று தாங்களும் முன்வந்து 15 நாட்களுக்குள் அகற்றிட வேண்டும்.
 
அவ்வாறு அகற்றப்பட்ட கழக கொடிமரங்களின் விவரங்களை தலைமை கழகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran