செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 17 ஆகஸ்ட் 2016 (13:55 IST)

திமுக உறுப்பினர்கள் 88 பேர் இடை நீக்கம் : அவைத் தலைவர் தனபால் அதிரடி உத்தரவு

தமிழக சட்டசபையில், தொடர்ந்து கூச்சலில் ஈடுபட்டதால், திமுக உறுப்பினர்களை குண்டு கட்டாக வெளியேற்றியதோடு, சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


 

 
சமீபகாலமாக, சட்டமன்றத்தில், அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வது வாடிக்கையாகி வருகிறது.
 
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தின் போது, தொடர்ந்து கூச்சல் போட்டதாலும், அமளியில் ஈடுபட்டதாலும் திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றும் படி அவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டார். 
 
ஆனால், திமுக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவைக் காவலர்கள், அவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோரை குண்டு கட்டாக தூக்கி வந்து வெளியேற்றினர். 
 
மேலும், அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல், அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீர்மானம் கொண்டுவந்தார். 
 
அதை ஏற்று, 88 திமுக உறுப்பினர்களையும் ஒரு வாரத்திற்கு இடை நீக்கம் செய்து அவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டார்.