1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (09:42 IST)

கார்ப்பரேட்களுக்கு சேவகம்: மத்திய அரசை விளாசிய ஸ்டாலின்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமைக்கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆரம்பம் முதலே ஆதரவு கொடுத்து வரும் கட்சிகளில் ஒன்று திமுக. ஏற்கனவே நாடு தழுவிய பாரத் பந்த்தில் கலந்துகொண்ட திமுக, தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தனது தோழமை கட்சிகளுடன் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 
 
தமிழகம் முழுவதும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என்று திமுக அறிவித்திருந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் காவல்துறை அனுமதி மறுத்தாலும் திட்டமிட்டபடி இன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என திமுக திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது சொன்னபடி வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தோழமைக்கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் இந்த போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பின்வருமாறு பேசினார், விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கு எதிராக இந்தியாவே கொந்தளித்துள்ளது. கடுமையான குளிரிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தா; டெல்லியே ஸ்தம்பித்திருக்கிறது. 
 
ஆனால், விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. விவசாயிகளை அந்நிய கைகூளி, மாவோலிஸ்ட், தீவிரவாதி என மத்திய அரசு கொச்சைப்படுத்துகிறது. மத்திய அரசு பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறது. 
 
விவசாயிகள் கோரிக்கை ஒன்றே ஒன்று தான் அது ‘இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்’ என்பது தான். எதற்காக இவ்வளவு அவசரம், யாரை பாதுகாக்க இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்? என்ற கேள்விகளை முன்வைத்த ஸ்டாலின் வேளாண் சட்டத்தைத் திரும்பப்பெறும் வரையில் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.