1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 23 ஜூன் 2016 (09:21 IST)

திமுகவினரை வெளியேற்றிய மாஃபா பாண்டியராஜன்

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவரது உரையின் நடுவில் குறுக்கிட்டு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.


 
 
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், விஷன் 2023 பற்றி பேசத் தொடங்கியபோது, அதிமுகவின் ஆவடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன் பேசத் தொடங்கினார். இதனால் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
 
எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு அமைச்சர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். எம்.எல்.ஏ பதிலளிப்பது சட்டமன்ற மரபல்ல என்று அமளியில் ஈடுபட்ட திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
முன்னதாக மு.க.ஸ்டாலின், ஆந்திர மாநிலத்தில் விவசாயிகள் தேசிய வங்கியில் வாங்கியிருக்கும் கடனை தள்ளுபடி செய்திருப்பதுபோல, தமிழகத்திலும் தள்ளுபடி செய்யவேண்டும் என பேசியபோது, அமைச்சர் செல்லூர் ராஜு குறுகிட்டு தமிழகத்தில் ஆந்திராவைவிட அதிகமாக 5,709 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.
 
தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தில் பின்தங்கியிருக்கிறது என மு.க.ஸ்டாலின் பேசியபோது குறுக்கிட்ட அமைச்சர் தங்கமணி, தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள 46 சிறப்பு பொருளாதார மண்டலங்களில் 36 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தமிழகத்தில்தான் உள்ளன என்றார்.