ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 26 ஜூன் 2016 (15:08 IST)

அதிர்ச்சி அடைந்தேன்- சொல்கிறார் மு.க.ஸ்டாலின்

மேட்டூர் அரசு மருத்துவமனையில், 20 பேருக்கு அறுவை சிகிச்சை செய்ததில் பார்வை பறிபோன செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கைியில், சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில், கண் புரை நீக்கும் அறுவை சிகிச்சை செய்த 20 பேருக்கு கண்களில் சீழ் பிடித்து பார்வை படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ள செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
 
ஏழை எளியவர்கள் நம்பிக்கை வைத்துச் செல்லும் அரசு மருத்துமனைகளில் இது போன்றதொரு கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்திருப்பது வேதனையளிப்பதாக இருக்கிறது. அதுவும் கண் சிகிச்சையில் இவ்வளவு அலட்சியமாக மேட்டூர் அரசு மருத்துமனையின் மருத்துவர்கள் செயல்பட்டுள்ளது கவலையளிப்பதாக இருக்கிறது.
 
இந்த ஒட்டுமொத்த பாதிப்பையும் பார்த்தால், சிகிச்சை பெற்றுத் திரும்பிய ஏழைகளுக்கு போதிய வழிகாட்டுதல்களை வழங்க மேட்டூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் தவறிவிட்டது. அது மட்டுமின்றி தரமற்ற லென்சுகள் பொருத்தப்பட்டன என்றும் செய்திகள் வெளிவருகின்றன.
 
தனியார் மருத்துமனையில் கட்டணம் செலுத்தி அறுவை சிகிச்சை செய்து கொள்ள இயலாத ஏழை எளிய நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடுகிறார்கள். அங்கு நடைபெறும் அறுவை சிகிச்சைகளிலும் இவ்வளவு மெத்தனமாகச் செயல்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
 
தமிழகத்தில் பார்வை கோளாறு ஏற்பட்டுள்ளவர்களில் 62.6 சதவீதம் பேர் இது போன்ற கண் புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அதிமுக அரசே தெரிவித்துள்ளது. அப்படியிருக்கும் போது கண் புரை அகற்றும் அறுவை சிகிச்சையில், அரசு போதிய கவனம் செலுத்தி செயல்பட்டிருக்க வேண்டும். 20 பேருக்கு இப்போது ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு, தமிழக அரசு இந்த அறுவை சிகிச்சை முறைகளில் போதிய கவனம் செலுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.
 
எனவே, கண் அறுவை சிகிச்சையில் உள்ள நவீன சிகிச்சை முறைகள், அறுவை சிகிச்சைகளுக்கு முன்னும் பின்னும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு அவ்வப்போது சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
 
சென்னை போன்ற மாநகரங்களில் மட்டுமின்றி, மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துமனைகளிலும் ஏழை எளிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தரமான சிகிச்சை கிடைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
 
கண் அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண கண் பார்வை பெற்று வீடு திரும்புவதற்கு அதிமுக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.