வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (09:15 IST)

தேர்தல் பிரச்சாரத்தில் கைகலப்பு; திமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதல்!

Election
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக – நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. வருகிற பிப்ரவரி 25ம் தேதியன்று தேர்தல் பிரச்சாரம் முழுவதுமாக முடிவடைகிறது. இதனால் தினம்தோறும் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனாகா என்பவர் வேட்பாளராக போட்டியிடும் நிலையில் கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வேட்பாளரான மேனகாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு அக்கட்சி பிரமுகர்களும், கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிக்க சென்றபோது அதே பகுதியில் திமுகவினரும் வந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து கைகலப்பாக மாறியுள்ளது. சண்டை மூண்டதால் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர். இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினர் 4 பேர், திமுகவினர் 4 பேர் மற்றும் 3 போலீஸ் உள்பட 11 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதல் குறித்து அறிந்து அங்கு உடனடியாக விரைந்த துணை ராணுவப் படையினர் இரு தரப்பையும் அங்கிருந்து அப்புறப்படுத்திய நிலையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இருகட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K