வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (10:51 IST)

இந்தப் பழம்(கூட்டணி) புளிக்கும் ; தனித்துப் போட்டியா ? - விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு !

அதிமுக வுடனானக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்பமனு விநியோகம் நாளை முதல் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தாமல் மௌனமாக இருந்தது. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்தின் வருகை ஆகியக் காரணங்களால் மீண்டும் புத்துணர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகக் கூட்டணியில் தேமுதிக விற்கு மிகவும் குறைவான சீட்டுகளே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தங்களை விடக் குறைந்த பலமுள்ள கட்சிகளாக பாமக மற்றும் பாஜக அளவுக்குக் கூட தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்பதால் விரக்தியில் இருப்பதாகத் தெரிகிறது.

அதிமுகக் கூட்டணியில் எப்படியாவது தேமுதிக வை இழுக்கவேண்டும் எனக் கடுமையாக முயற்சி செய்த பாஜகவும் தங்களுக்கு வேண்டிய சீட்டுகள் கிடைத்தது தேமுதிகவை டீலில் விட்டுவிட்டது. இதையடுத்து அதிமுக வுடனானக் கூட்டணி பேரங்கள் எதிர்பார்த்த மாதிரி முடியவில்லையென்றால் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதை மனதில் வைத்து 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் விருப்பமனு விநியோகத்தை அறிவித்துள்ளார் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த்.

இது தொடர்பான அவரது அறிக்கையில் ‘உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவின் பதினேழாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேமுதிகவின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் நாடாளுமன்றத் தேர்தல் விருப்ப மனுக்களை 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 06.03.2019 புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 20 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.