1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 22 ஜூன் 2016 (15:12 IST)

தேமுதிக தனித்து போட்டி: மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகியது

நீண்ட நாட்களாக நீடித்த தேமுதிகவின் உள்ளாட்சி தேர்தல் நிலைப்பாடு இன்று முடிவுக்கு வந்தது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக தனித்து போட்டியிடும் என அக்கட்சி இன்று அறிவித்துள்ளது.


 
 
தர்மபுரியில் இன்று பேட்டியளித்த தேமுதிக மாநில பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் வருகிற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என அறிவித்தார்.
 
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக, மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்து, மிக மோசமான தோல்வியை தழுவியது. அந்த கட்சியின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான விஜயகந்த் உட்பட போட்டியிட்ட அனைத்து தேமுதிக வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்தனர்.
 
இந்த மோசமான தோல்வியை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தோல்வியடைந்த வேட்பாளர்கள் என அனைவருடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.
 
இந்த ஆலோசனைகளில் அனைவரும் சொன்னது கட்சி மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்ததே தோல்விக்கு காரணம் என்று. இதனையடுத்து தேமுதிக மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகும் என ஊடகங்களில் செய்திகள் கசிந்தன.
 
சில நாட்களாக இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இல்லாமல் உலா வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் நல கூட்டணி தலைவர்கள், தேமுதிக எங்கள் கூட்டணியில் இருந்து விலகினாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பேட்டியளித்தனர்.
 
இந்நிலையில் இன்று தேமுதிக இந்த அறிவிப்பை வெளியிட்டு மக்கள் நல கூட்டணியில் இருந்து விலகி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் எனவும் அறிவித்துள்ளது தேமுதிக.