தினகரன் இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததை நேரில் பார்த்த முக்கிய சாட்சி!
தினகரன் இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததை நேரில் பார்த்த முக்கிய சாட்சி!
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ள அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை பெற இடைத்தரகர் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்து அவர் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளார்.
முதலில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் சிக்கினார். அவர் அளித்த வாக்குமூலத்தை அடுத்து தினகரன் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் சிக்கினார். தொடர்ந்து தினகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் மேல் ஆதாரங்கள் கிடைத்து வருவதால் தினகரன் பிடி இறுகி வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக வழக்கறிஞர் கோபிநாத் முக்கிய சாட்சியாக மாறியுள்ளார். கோபிநாத் அப்ரூவராக மாறியிருப்பது டிடிவி தினகரனுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் நேன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஹவாலா ஏஜென்ட் சுகேஷ் தினகரன் தரப்பில் இருந்து பணம் பெற்றதை தான் நேரில் பார்த்ததாகவும், பணத்தை பெற்றுக்கொண்ட சுகேஷ் சென்னையில் உள்ள நபரிடம் தொலைபேசியில் பேசியதாகவும் கோபிநாத் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் தினகரனின் நீதிமன்ற காவல் வருகின்ற 15ஆம் தேதி முடிவடையும் நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்காது என்றே கூறப்படுகிறது. ஆதாரங்கள் அதிகம் இருப்பதாகவும், ஆதாரங்களை அழிக்கும் சக்தி படைத்தவர் என்பதால் தினகரனுக்கு ஜாமீன் கொடுக்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.