1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (12:08 IST)

தினகரன் முதல்வராக வாய்ப்பு: சுப்பிரமணியன் சுவாமி அதிரடி!

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தற்போது உள்ளார். இவரது ஆட்சி விரைவில் வீழ்சியடையும் எனவும் டிடிவி தினகரன் விரைவில் முதல்வராக வாய்ப்பு உள்ளது எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
 
பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறினார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிட்டாலும், சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து தனது ஆதரவை டிடிவி தினகரனுக்கே தெரிவித்து வந்தார்.
 
மேலும் ஆர்கே நகர் தொகுதியை சேர்ந்த பல வாக்காளர்கள், நான் ஏன் பாவியான டிடிவி தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக என்னிடம் கேட்கின்றனர். அதற்கு நான் அவர்கள் அனைவரும் ராமாயணத்தில் வாலியை விட, சுக்ரீவனுக்கு ராமர் ஏன் உதவி செய்தார் என்பதைப் படிக்க வேண்டும் என கூறியதாக தெரிவித்தார். சுப்பிரமணியன் சுவாமி தினகரனை சுக்ரீவனாக குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் மைனாரிட்டி எம்எல்ஏக்கள் தான் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து சுப்பிரமணியன் சுவாமி இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
 
தற்போது நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தின் முடிவை வைத்து பார்க்கும்போது எடப்பாடி பழனிசாமி அரசின் வீழ்ச்சி விரைவில் ஏற்படும் என்பது தெரிகிறது. தினகரன் முதல்வராக வாய்ப்புள்ளது. அதிமுக அணிகளை விரைவில் இணைப்பதே நன்று என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.