’என்னை பார்க்கவிடுங்கள்’ - கதறி அழுத ஜெயலலிதா அண்ணன் மகள்
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் காவல் துறையினருடன் போராடி உள்ளே நுழைந்தார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று மாலை மாரடைப்பு காரணமாக சிறப்பு பொதுப்பிரிவு வார்டில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்படுவதாகவும், அவர் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இதனால், நேற்று இரவு முதலே, அஇஅதிமுக அமைச்சர்களும், தொண்டர்களும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர். இதனையடுத்து, காவல் துறையினரும் ஏராளமானோர் மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் காவல் துறையினரை மீறி அப்பல்லோ மருத்துவமனைக்குள் தொண்டர்கள் நுழைய முயன்றனர். பின்னர், காவல் துறையினர் தடியடி செய்து அவர்களை கலைத்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் திரு ஜெயராமனின் மகள் திருமதி. தீபா தீடீரென அங்கு வந்தார். மேலும், மருத்துவமனைக்குள் ஆவேசமாக நுழைய முயன்றார். ஆனால் காவல் துறையினர் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து மருத்துவமனை வளாகத்திலேயே ‘எனது அத்தையை பார்க்க என்னை அனுமதிக்க மருக்கிறார்கள்’ என்று கதறி அழுதார். இதனையடுத்து அவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே, கடந்த அக்டோபர் மாதம் அப்பல்லோ வந்தபோதும், தீபாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனது அத்தையை பார்க்க வேண்டும், அவரது கையை பிடித்து ஆறுதல் கூறவேண்டும். ஒரு சிலர் என் அத்தை நான் சந்திப்பதை தடுக்கின்றனர் என ஆதங்கத்துடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.