1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2017 (08:54 IST)

கோபித்துக்கொண்டு பாதியில் ஓடிய தீபா: டிவி விவாதத்தில் பரபரப்பு!

கோபித்துக்கொண்டு பாதியில் ஓடிய தீபா: டிவி விவாதத்தில் பரபரப்பு!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆர்கே நகர் தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நேர்பட பேசு என்ற விவாத நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். இதில் அதிமுக அம்மா அணியை சேர்ந்த செல்லூர் ராஜூவும் கலந்து கொண்டார்.


 
 
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட தீபா செல்லூர் ராஜூவின் தனிநபர் தாக்குதல் விமர்சனத்தால் பாதியிலேயே கோபித்துக்கொண்டு வெளியேறினார். ஜெ.தீபா தனது தி.நகர் வீட்டிலிருந்து நேரலையில் கலந்துகொண்டார்.
 
இந்த விவாதத்தின் போது தீபாவின் கணவர் மாதவன் அவருக்கு எதிராக திடீரென பேட்டியளித்து தனிக்கட்சி தொடங்கப்போவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தீபா, தனது கணவர் மாதவனை சசிகலா அணியினர் பின்னால் இருந்து, அவரது மனதை மாற்றி இயக்குவதாக கூறினார்.
 
இதனை அதிமுக அம்மா அணியை சேர்ந்த செல்லூர் ராஜூ மறுத்தார். மேலும் தீபாவை தங்கச்சி முதல்ல வீட்டுக்காரரை திருத்திட்டுவாம்மா என கூறியதும் ஆவேசமடைந்த தீபா, தேவையில்லாத விமர்சனங்கள், வார்த்தைகள் வருவதால் நான் இத்துடன் விலகுகிறேன் என கோபித்துக்கொண்டு விவாதத்தில் இருந்து வெளியேறினார்.
 
நிகழ்ச்சியில் தீபா பேச ஆரம்பித்த தொடக்கத்தில் இருந்தே செல்லூர் ராஜூ அவரை பேசவிடாமல் குறுக்கீடு செய்து கொண்டே இருந்தார். நிகழ்ச்சி தொகுப்பாளர் குறுக்கீடு செய்ய வேண்டாம், அவரை பேச அனுமதிக்க வேண்டும், பின்னர் உங்கள் மறுப்பை தெரிவியுங்கள் என செல்லூர் ராஜுவை பலமுறை அறிவுறுத்தியும் அவர் தொடர்ந்து தீபாவை பேச விடாமல் குறுக்கீடு செய்துகொண்டே இருந்தார்.