கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு திடீர் கைதால் பரபரப்பு
கரூர் அருகே மணல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை காவல் துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம், கோம்பு பாளையம், தோட்டாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு மணல் எடுக்க புதிதாக குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அங்கு புதிய மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி காவிரி பாதுகாப்பு இயக்கத்தினர், தளவாப்பாளையம் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதனிடையே முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, திரைப்பட இயக்குனர் கவுதமன், தேமுதிக தொழிற்சங்க நிர்வாகி பொன் இளங்கோவன், உள்ளிட்ட ஏராளமான மணல் குவாரிக்கு சென்றனர்.
ஆனால், வழியிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, தளவாப்பாளையம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் நல்லக்கண்ணு, இயக்குனர் உள்பட சுமார் 400 பேரை கைது செய்தனர். மூத்த தலைவர் நல்லக்கண்ணு கைது செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுயில் பரபரப்பு ஏற்பட்டது.