சதுரகிரி மலையில் இரவில் தங்குபவர்களை கைது செய்யுங்கள்: நீதிமன்றம் அதிரடி..!
சதுரகிரி மலையில் காலையில் சென்று மாலையில் திரும்ப வேண்டும் என்றும், இரவில் தங்குபவர்களை வனத்துறையினர் கைது செய்யலாம் என்றும், நீதிமன்றம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சதுரகிரி மலையில் இரவில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரவில் தங்குவதற்கு அனுமதி அளித்தால் சாப்பாடு தயாரிக்கப்படுவதாகவும், இதனால் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், வனத்துறை வாதம் செய்தது.
இதனை அடுத்து, நீதிபதி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றாலும், மாலை 4 மணிக்குள் பாதுகாப்பாக மலையில் இருந்து இறங்க தொடங்கிவிட வேண்டும். மேலும், எத்தனை பேர் மலையேறுகிறார்கள், எத்தனை பேர் திரும்பி வந்தார்கள் என்பதை கணக்கிட வேண்டும் என்றும், யாராவது அனுமதியின்றி மலையில் தங்கினால், வனத்துறையினர் கைது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சதுரகிரி மலையில் பிளாஸ்டிக் மற்றும் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை தடை செய்ய வேண்டும் என்றும், வனத்துறை சோதனைச் சாவடிகள் பக்தர்களை முழுமையாக சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வனப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல், வனத்துறையினர் தடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Edited by Siva