முத்துகிருஷ்ணன் உயிரிழப்புக்கு மாநகராட்சி தான் பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி
சென்னையில். நேற்றிரவு பணி முடிந்து திரும்பும்போது மழை நீர்வடிகால் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்த புதிய தலைமுறை பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்புக்கு மாநகராட்சிதான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், சென்னை ஜாபர்கான்பேட்டையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவு வேதனையளிக்கிறது. குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையில் பல இடங்களில் மழை நீர் வடிகால் பள்ளங்கள் மூடப்படவில்லை. அதனால் விபத்துகள் ஏற்படக்கூடும். அதைத் தடுக்க பள்ளங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும் என்று நேற்று தான் எச்சரித்திருந்தேன். நேற்றிரவே விபத்து நடந்து ஓர் உயிரை பறித்திருக்கிறது .
முத்துகிருஷ்ணனின் உயிரிழப்புக்கு முழுக்க முழுக்க மாநகராட்சியின் அலட்சியம் தான் காரணம். மாநகராட்சி தான் உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும். முத்துகிருஷ்ணனின் குடும்பத்திற்கு ரூ.25லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Edited by Sinoj