1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (16:37 IST)

இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!

Cooum River
இந்தியா முழுவதும் உள்ள ஆறுகள் மாசடைவது குறித்து மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நடத்திய ஆய்வில் மிக மோசமடைந்த ஆறுகளில் முதல் இடத்தில் கூவம் உள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு ஜீவ நதிகள் பாய்ந்து நாட்டை வளப்படுத்தி விவசாயத்தை செழிக்க செய்து வருகின்றன. ஆனால் நகரமயமாக்கல், தொழிற்சாலைகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நதிகள் அழிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது மத்திய மாசுகட்டுபாட்டு வாரியம் (CPCB) இந்தியாவில் உள்ள மிகவும் மோசமடைந்த ஆறுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இதற்காக இந்தியா முழுவதும் 603 ஆறுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பயோமெடிக்கல் ஆக்ஸிஜன் டிமான்ட் (Biomedical Oxygen Demand – BOD) என்னும் சோதனை இந்த ஆறுகளில் மேற்கொள்ளப்பட்டது. இதன் தன்மை அதிகரிப்பதற்கு ஏற்ப ஆறு மாசடைந்திருக்கும் விதமும் அதிகரிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அடையாறு, அமராவதி, பவானி, காவேரி, கூவம், பாலாறு, சரபங்கா, தாமிரபரணி, வசிஷ்ட நதி மற்றும் திருமணிமுத்தாறு உள்ளிட்ட ஆறுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அதிகபட்சமாக லிட்டருக்கு 345 mg அளவுடன் சென்னை கூவம் ஆறு (Cooum River) நாட்டிலேயே அதிக மாசடைந்த ஆறாக முதல் இடத்தில் உள்ளது.

Cooum River


அடுத்து 292 mg அளவுடன் குஜராத்தின் சபர்மதி ஆறு இரண்டாவது இடத்திலும், 287 mg அளவுடன் உத்தர பிரதேசத்தின் பஹிலா ஆறு மூன்றாவது இடத்திலும் உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை வேகமாக மாசடைந்து வரும் ஆறுகளில் கூவத்திற்கு பிறகு தாமிரபரணி ஆறு உள்ளது. ஆற்றங்கரையோரம் இருந்த 80% ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம் மற்றும் சேத்பேட்டையில் உள்ள லாங்ஸ் கார்டனில் மூன்று சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுத்திகரிக்கப்படாத சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுப்பதில் தற்போது அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து கூவத்தை மீட்க அரசும், மக்களும் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Edit by Prasanth.K