1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2016 (20:51 IST)

நீதிபதிகள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: வைரமுத்து மீதான வழக்கு தள்ளுபடி

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதை அடுத்து, அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தள்ளுபடி செய்யப்பட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி கவிஞர் வைரமுத்து பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக முகுந்த் சந்த் போத்ரா என்பவர் வைரமுத்து மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்
 
இந்த வழக்கில் வைரமுத்து கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். பின்னர், தனது பேச்சிற்காக மன்னிப்பு தெரிவித்து வைரமுத்து தரப்பில் நிதீமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வைரமுத்துவின் மன்னிப்பு தெரிவித்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, போத்ராவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கறிஞர் பாலசுப்பிரமணியத்தின் மனுவையும் தள்ளுபடி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.