தமிழ்நாட்டில் 37 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ் கட்சி

வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified சனி, 17 மே 2014 (15:41 IST)
தமிழ்நாட்டில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. தொடர்ச்சியான தமிழன விரோதப் போக்காலும், பல்வேறு ஊழல் குற்றச்சாற்றுகளின் காரணமாகவும் தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் 39 தொகுதியிலும் தனித்து போட்டியிட்டது. முதல் முறையாக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் துணை இல்லாமல் தனியாக தேர்தலை சந்தித்தது. தேர்தலுக்கு முன் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகளுக்கு ரகசிய தூது அனுப்பியதாக சொல்லப்படுகின்றது.
 
ஆனால் எந்த கட்சியும் காங்கிரசுடன் கூட்டணி சேர முன்வரவில்லை. அதே போல் தேர்தல் பிரசாரத்துக்கு எந்த நடிகரும் முன்வராத நிலையில் கார்த்திக் மட்டும் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார்.
 
இதனால் தேர்தலில் பரிதாபகரமான நிலையில் தோல்வியை சந்தித்தது. 39 தொகுதிகளில் 37 தொகுதியில் காங்கிரஸ் டெபாசிட் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. பெரும்பாலான தொகுதிகளில் நோட்டோ ஓட்டுகளை விட குறைவான வாக்குகளை பெற்றது.
 
கன்னியாகுமரியில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் எச்௦.வசந்தகுமார் 2,44,244 வாக்குகள் பெற்று 2–வது இடத்தைப் பிடித்து கவுரவமான தோல்வியை தழுவினார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் 47,554 வாக்குகள் மட்டும் பெற்று தேமுதிக, திமுகவுக்கு அடுத்தபடியாக 4–வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அவருக்கு டெபாசிட் கிடைத்தது ஒரு ஆறுதல்.
 
மற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் 37 தொகுதிகளில் டெபாசிட் இழந்ததுடன் 3–வது, 4–வது இடத்துக்கு தள்ளப்பட்டனர். தர்மபுரி தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன் 4–வது இடத்துக்கு தள்ளப்பட்டதுடன் வெறும் 15,450 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்களில் மிகக்குறைந்த வாக்கு பெற்று கடைசி இடத்தில் இருப்பவரும் இவரே.
 
திமுக கன்னியாகுமரியில் பாஜக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாக 4–வது இடத்துக்கு தள்ளப்பட்டு டெபாசிட்டை இழந்தது. இதேபோல் திமுக, புதுவையிலும் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாக 4–வது இடத்துக்கு தள்ளப்பட்டு டெபாசிட்டை இழந்தது.
 
தர்மபுரி, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், விருதுநகர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் திமுக 3–வது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது.


இதில் மேலும் படிக்கவும் :