கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு ஏன்? கைவிரித்த முதல்வர்
கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் என்னவென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. சுமார் 5262 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கக் காரணம் கோயம்பேடு மார்க்கெட் ஹாட்ஸ்பாட்டாக மாறியதுதான். அங்கு பணிபுரிந்த பல தொழிலாளர்களுக்குக் கொரோனா உறுதியானதை அடுத்து அவர்களைப் பரிசோதிக்க மளமளவென எண்ணிக்கை உயர ஆரம்பித்தது.
இந்நிலையில் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என்னவென முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று சொல்வது தவறு.
கோயம்பேட்டில் கொரோனா தொற்று ஏற்படும் என்று கணித்து முன்னரே வியாபாரிகளை எச்சரித்தோம். விற்பனை பாதிக்கும் என்ற எண்ணத்தில் வியாபாரிகள் இருந்ததால் கோயம்பேடு மூலம் தொற்று அதிகரித்தது.
பலமுறை அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் வியாபாரிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். தங்களுக்கு இழப்பு ஏற்படும் என அஞ்சி தற்காலிக சந்தைக்கு செல்ல வியாபாரிகள் மறுப்பு தெரிவித்தனர் என தொற்று அதிகரித்தமைக்கான காரணத்தை தெரிவித்துள்ளார் முதல்வர்.