புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth.K
Last Modified: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (14:44 IST)

கிளெஸ்டர் அளவிலான ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகள் - சத்திரப்பட்டி அணி முதலிடம்!

Isha
‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 2 இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் சத்திரப்பட்டி மற்றும் சாத்தமங்கலம் அணிகள் முதலிடம் பிடித்தன.


 
கிராமப்புற மக்களின் வாழ்வில் புத்துணர்வையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் நோக்கத்தில் ‘ஈஷா கிராமோத்சவம்’ என்னும் விளையாட்டு திருவிழாவை ஈஷா அவுட்ரீச் அமைப்பு 2004-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்தாண்டு 15-வது ஈஷா கிராமோத்வப் போட்டிகள் தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது. இதில் 25,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 60,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

அதன் ஒருபகுதியாக, மதுரையில் அலங்காநல்லூர் மற்றும் மேலூர் ஆகிய 2 இடங்களில் கிளெஸ்டர் அளவிலான வாலிபால் போட்டிகள் ஆக.12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான கிராம அணிகள் பங்கேற்றன.

அலங்காநல்லூரில் நடைபெற்ற போட்டியை தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் திரு.மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார். விறுவிறுப்பாக நடந்த வாலிபால் போட்டியின் முடிவில் சத்திரப்பட்டி - ஏ அணி முதலிடமும், கள்ளந்திரி அணி 2-வது இடத்தையும், சாப்டூர் அணி 3-வது இடத்தையும், பாறைப்பட்டி அணி 4-வது இடத்தையும் பிடித்தன.

இதேபோல், மேலூரில் நடைபெற்ற போட்டிகளில் சாத்தமங்கலம் அணி முதல் இடத்தையும், சின்னக்கட்டளை எஸ்.எஸ்.பி.எம். அணி 2-வது இடத்தையும், சூரக்குண்டு - ஏ அணி 3-வது இடத்தையும், பரவை சாலஞ்சர்ஸ் அணி 4-வது இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதுதவிர விருதுநகர் மாவட்டத்தில் சித்துராஜபுரம், சாத்தூர், முகவூர் ஆகிய இடங்களிலும் ராமநாதபுரத்தில் பரமக்குடியிலும் கிளெஸ்டர் அளவிலான வாலிபால் போட்டிகள் நடைபெற்றன. இதில் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ திரு.முருகேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

கிளெஸ்டர் போட்டிகளில் முதல் 4 இடங்களை பெற்ற அணிகள் அடுத்த மாதம் நடைபெறும் டிவிஸினல் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.

‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு திருவிழாவின் இறுதிப் போட்டிகள் செப்.23-ம் தேதி கோவையில் ஆதியோகி முன்பு சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மிக பிரமாண்டமாக நடைபெறும். வாலிபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும்