1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (12:05 IST)

Chennai Local train crash: விசாரணை குழு அமைப்பு!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த மின்சார ரயில் விபத்து தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. 

 
மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: 
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நடை மேடையில் ஏறி திடீரென விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் காயம் இல்லை. 
 
ஆனால் அதே நேரத்தில் ரயில் ஓட்டுநர் பவித்ரன் என்பவர் மட்டும் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார ரயில் தடம் புரண்டதை அடுத்து ஓட்டுநர் நடைமேடையில் இருந்த தூய்மை பணியாளர்களை விலகி போகும்படி எச்சரித்து அவர்களை காப்பாற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
விபத்து குறித்து தெற்கு ரயில்வே விளக்கம்: 
சென்னை கடற்கரை ரயில் நிலைய புறநகர் ரயில் விபத்து குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளான புறநகர் ரயிலில் இருந்து ஓட்டுநர் கீழே குதித்து உயிர் தப்பினார். கடற்கரை ரயில் நிலையத்தில் ஒன்றாவது நடைமேடையில் மோதி விபத்துக்குள்ளான ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. 
விபத்துக்குள்ளான ரயில் மோதியதில் ஒன்றாவது மேடை சேதமடைந்தது என்றாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. புறநகர் மின்சார ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகளின் உயர் நிலைக்குழு ஆய்வு செய்து விசாரணை செய்து வருகிறது. 
விபத்துக்குள்ளான ரயிலின் சேதமுற்ற இரண்டு பெட்டிகள் தவிர இதர பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக உள்ளனர். இவ்வாறு அந்த விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
விபத்து தொடர்பாக விசாரணை குழு: 
மேலும், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த மின்சார ரயில் விபத்து தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ரயில்வே பாதுகாப்பு அதிகாரி பிரேம்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. குழுவில் மெக்கானிக், எலக்ட்ரிகல் துறை அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என ரயில்வே தகவல் அளித்துள்ளது.