நூதனமாகக் கார் திருடிய கும்பல் – மதுரையில் கால்டாக்ஸி டிரைவர் கொலை !
சென்னையில் இருந்து குற்றாலம் செல்வதற்கு வாடகைக் கார் வேண்டும் என சொல்லி கால்டாக்ஸி டிரைவரைக் கொலை செய்துள்ளது ஒரு கும்பல்.
சென்னை, அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கால்டாக்ஸி டிரைவர் நாகநாதன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். இவரிடம் குற்றாலம் செல்வதாக சொல்லி ஒரு குழுவினர் கார் வாடகைக்குக் கேட்டுள்ளனர். நாகநாதனும் தனது முதலாளியிடம் இது சம்மந்தமாக சொல்லிவிட்டு குற்றாலத்துக்கு சென்றுள்ளார்.
ஆனால் சொன்னதுபோல இரண்டு நாட்களில் அவர் திரும்பி வராததால் சந்தேகப்பட்ட அவரது முதலாளி நாகநாதனை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் அவர் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததை அடுத்து சந்தேகமடைந்து போலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். விசாரணையில் மதுரைக்கு அருகே நாகநாதனின் உடல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் விசாரணையைத் துரிதப்படுத்த திருச்சியில் காரின் பெய்ண்ட் மற்றும் நம்பர் பிளேட் ஆகியவற்றை மாற்ற முயன்ற அந்த கொலைகார கும்பல் மாட்டியுள்ளது.
போலிஸ் விசாரணையில் ஜெயசுதா, அவரது காதலன் ஹரிஹரன், ஜெகதீஷ் மற்றும் பெரோஸ் அஹமது ஆகியோர்தான் இந்த கொலையை செய்தது எனப் போலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.