வெள்ளி, 21 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2016 (09:13 IST)

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள்!

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலைகுறித்து பல்வேறு வதந்திகள் வந்தாலும். அவருக்கான சிகிச்சை தீவிரமாக நடந்து வருகின்றன.


 
 
லண்டனில் இருந்து வந்த டாக்டர் ரிச்சார்ட் பீலே முதல்வர் ஜெயலலிதாவை பரிசோதித்து அவரது ஆலோசனைப்படி முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு புறம் வதந்திகள் வந்தாலும், அவர் நலமாக இருக்கிறார், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது என அறிக்கை வெளியிட்டு வருகிறது மருத்துவமனை நிர்வாகம்.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து தலை சிறந்த மருத்துவர்கள் குழு நேற்று இரவு சென்னை வந்தது. எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்மானி, மயக்கவியல், தீவிர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் டாக்டர் அஞ்சன் டிரிக்கா மற்றும் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதீஷ் நாயக் ஆகியோர் அடங்கிய மருத்துவ நிபுணர் குழுவினர் நேற்று இரவு 8.30 மணி அளவில் சென்னை வந்தனர்.
 
இந்த மருத்துவர்கள் குழு முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை ஆலோசித்தனர். பின்னர் முதல்வரின் உடல்நிலையைப் பரிசோதனை செய்து அவருக்கு தொடர்ந்து அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்த ஆலோசனையை நடத்தினர்.