செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 10 மே 2024 (14:21 IST)

கோடை வெயிலால் விவசாயம் பாதிப்பு- மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டுமென வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை!

வெற்றிலை விளைச்சல் சரிவால்  விலை கிடு கிடு வென உயர்ந்து வருகிறது.  தென்மாவட்டங்களில் திருப்புவனம், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு வெற்றிலை பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் பல ரகங்கள் இருந்தாலும் திருப்புவனத்தில் சிறுகாமணி, கற்பூரம் உள்ளிட்டவைகள் அதிகளவு பயிரிடப்படுகிறது திருப்புவனம், புதூர், பழையூர், நயினார்பேட்டை, வெள்ளக்கரை, கலியாந்தூர்  வட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 300 ஏக்கரில் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
நெல் பயிரிட்ட விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து ஐந்து முதல் 13 விவசாயிகள் வரை இணைந்து கூட்டாக வெற்றிலை பயிரிடுகின்றனர். வெற்றிலை பயிரிட்டு ஆறு மாதத்திற்கு  பிறகுதான் வெற்றிலை அறுவடை தொடங்கும். 
 
குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வரை வெற்றிலை அறுவடை நடைபெறும்,  15 நாட்களுக்கு ஒரு முறை வெற்றிலை கிள்ளப்படும். விளைச்சல் காலங்களில் ஏக்கருக்கு ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் கிலோ வெற்றிலை வரை கிடைக்கும். கிலோ 140 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்த வெற்றிலை தற்போது கிலோ 200 ரூபாயாக உயர்ந்து விட்டது. தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வெற்றிலை செடிகள் வாடி வதங்கி வருகின்றன.
 
தண்ணீர் பாய்ச்சினாலும் வெயிலின் தாக்கத்தை செடிகள் தாங்க முடியவில்லை. 10 கிலோ வெற்றிலை கிள்ளும் இடத்தில் ஒரு கிலோ, அரை கிலோ அளவே கிடைக்கிறது. விளைச்சல் அதிகரித்து விலை உயர்ந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும், விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளது எந்த விதத்திலும் பயன் அளிக்காது, இனி வரும் காலங்களில் முகூர்த்த நாட்களும் வருவதால் விலை 250 ரூபாய் வரை விற்பனையாக வாய்ப்புள்ளது.
 
எனவே வெற்றிலை உற்பத்தியை பெருக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என வெற்றிலை விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.