1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (15:07 IST)

ஈபிஎஸ் சிஎம் ஆவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது - வேலுமணி பேச்சு!

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என எஸ்.பி.வேலுமணி பேச்சு.


கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திமுக அரசை கண்டித்து வருகின்ற 2 ஆம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் தொடர்பான ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, திமுக ஆட்சியில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திமுக அரசை கண்டித்து டிசம்பர் 2 ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார். பத்திரிகை துறை மனது வைத்தால் திமுக ஆட்சி உடனே போய்விடும்.

தமிழ்நாடு முழுவதும் திமுக அரசு எந்த வளர்ச்சி பணியும் செய்யவில்லை. விளம்பரத்தில் மட்டுமே ஆட்சி ஓடுகிறது. கோவையில் உள்ள அனைத்து தொகுதியிலும் ஒரு பணியும் செய்யவில்லை. எந்த சாலையிலும் நடக்க முடியவில்லை. இதனை கண்டு கொள்ளாத அரசாக உள்ளது. திமுக டிசைன் டிசைனாக மக்களை ஏமாற்றுகிறது. மக்களின் பொதுவான போராட்டத்திற்கு அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் இல்லை.

எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் திமுகவை எதிர்க்கவில்லை. திமுகவை எதிர்த்து ஒவ்வொரு ஊரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது. சில கட்சிகளை பத்திரிகைகள் தூவானம் போட்டு கொண்டு வருகிறார்கள். மக்கள் ஆதரவு இல்லாமல் யாரும் வளர முடியாது. எதிர் கட்சியாக அதிமுக செயல்படவில்லை என மாயை உருவாக்குகிறார்கள்.

திமுககாரர்கள் சதி செய்கிறார்கள். அதிமுக எடப்பாடி பழனிச்சாமி பின்னால் உள்ளது. அடுத்த முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. தைரியம் இருந்தால் ஆட்சியை கலைத்து தேர்தல் வையுங்கள். இப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராக வருவார். இந்த ஆட்சி ஒரு குப்பை. இது செயல்படாத ஆட்சி. அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடி, காய்ச்சல்க்கு மருந்து இல்லை. அடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். 

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக அட்டுழியத்திற்கு எதிராக அதிமுகவினர் வேலை செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். மக்கள் இந்த ஆட்சி எப்போது போகும் என காத்திருக்கிறார்கள். திமுகவால் அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டி போட முடியாது. அதிமுக மட்டுமே மக்கள் செல்வாக்கு உள்ள கட்சி. திமுக ஆட்சி மக்களுக்கு உதவாத ஆட்சி. நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

Edited By: Sugapriya Prakash