1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 4 மார்ச் 2015 (13:58 IST)

ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவார்: மதுரை ஆதீனம் சொல்கிறார்

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வருவார் என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
 
கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது, "மகாமக பெருவிழாவினை முன்னிட்டு கும்பகோணம் பகுதியில் உள்ள 69 கோவில்களில் கும்பாபிஷேகம் செய்திடும் வகையில் திருப்பணிகள் நடந்து வருவதும், மகாமகப் பணிகளை சிறப்பாக அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாலும் மகாமக விழா இப்போதிலிருந்தே தொடங்கி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வருவார்.
 
சுக்ர தலமான கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்திடவும், அப்போது கோவில் தேர்கள் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு மாசிமக விழாவில் ஓடும் வகையில் தயார் செய்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
கும்பகோணம் மகாமக விழாவினை தேசிய விழாவாக அறிவிக்க பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும். மேலும், மகாமக குளத்தில் 16 சோடசலிங்கம், படிக்கட்டுகளை அமைத்த கோவிந்த தீட்சிதர் நினைவாக அவரது திருவுருவச் சிலையோ அல்லது மணிமண்டபமோ கும்பகோணத்தில் அமைத்திடவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.