இரட்டை இலை சின்னம்: ஸ்டே வாங்க முடியாமல் இரு அணிகளும் தவிப்பு
அதிமுகவின் இரு அணிகளுக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்றும், அச்சின்னம் முடக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது கூட கிட்டத்தட்ட அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் அதிமுக கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை இரு அணிகளும் சிறிது கூட எதிர்பார்க்காததால் படுபயங்கர அதிர்ச்சி அடைந்துள்ளது.
தேர்தல் ஆணையம் இலை குறித்த உத்தரவை வெளியிட்டவுடன் சட்ட வல்லுனர்களுடன் இரு அணி தரப்பினர்களும் ஆலோசித்து நீதிமன்றத்தில் ஸ்டே வாங்குவது குறித்து ஆலோசித்தன. ஆனால் சட்ட வல்லுனர்கள் இந்த உத்தரவுக்கு ஸ்டே வாங்க முடியாது என்று கையை விரித்துவிட்டார்களாம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், வேட்பு மனுத் தாக்கலும் முடியப் போகிற நிலையில் இருப்பதாலும் நீதிமன்றத்தை அணுக முடியாது என்றும், மேலும் 329வது சட்டப் பிரிவுப்படி தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு நீதிமன்றத்தில் ஸ்டே என்று கூறப்படும் இடைக்காலத் தடை பெற முடியாது என்றும் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி அப்படியே நீதிமன்றத்திற்கு சென்றாலும் தமிழகத்தில் உள்ள எந்தக் நீதிமன்றத்திற்கும் செல்ல முடியாது. சுப்ரீம் கோர்ட்டில் மட்டுமே முறையிட முடியும். ஆனால் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்து விட்டதால், சுப்ரீம் கோர்ட்டும் தலையிட வாய்ப்பு இல்லை. எனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை பொருத்தவரை இரு அணி வேட்பாளர்களும் சுயேட்சைகள் தான். அதை மாற்ற முடியாது என்ற நிலைதான் இப்போதைக்கு உள்ளது.