1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 3 டிசம்பர் 2016 (15:18 IST)

ரேஷன் கார்டு குறித்து புதிய முடிவு - உணவுத் துறை அதிகாரிகள் முடிவு

ஆதார் எண் இணைக்கும் பணி நிறைவடையாததால், ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட உணவு துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.


 

தமிழகத்தின் இயங்கிவரும் நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கான குடும்ப அட்டை கடந்த 2005ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த குடும்ப அட்டை 2009ஆம் ஆண்டு வரை பயன்படுத்தும் வகையில் அச்சிடப்பட்டு இருந்தது.

அதன் பிறகு 2010ஆம் ஆண்டு புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு பதிலாக, 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டுக்கும் உள்தாள் ஒட்டிபடி, பழைய குடும்ப அட்டைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு அடுத்த ஆண்டு முதல் மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்க திட்டமிட்டது. இந்த மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 87 சதவீதம் இந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது எனவும் கூறப்பட்டது. அதன்படி, கடந்த 30ஆம் தேதியுடன் ஆதார் எண்ணை இணைக்காத ரேஷன் கார்டுகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், ரேஷன் கார்டில் மீண்டும் உள்தாள் ஒட்டி, செல்லத்தக்க காலத்தை நீட்டிக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், பலர், 'ஆதார்' விபரம் தராததால், அந்த பணி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், வழக்கம் போல, ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட, உணவு துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.