செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (15:22 IST)

அன்று அதிமுக, இன்று திமுக.. இன்னொரு கூவத்தூர் ரெடி!

nellai mayor
நெல்லை மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் திமுக கவுன்சிலர்கள் வெளியூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு சகல வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா  மறைவிற்கு பின், அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூரில் போட்டு அடைத்து வைத்ததுபோல, தற்போது திமுகவும் அதே மாடலை கையில் எடுத்துள்ளது. நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக ஆளும் கட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 
 
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில், திமுகவினர் 44 வார்டுகளிலும், அவர்களது கூட்டணிக் கட்சியினர் 7 வார்டுகளிலும் கவுன்சிலர்களாக உள்ளனர். திமுக கவுன்சிலர்கள், கட்சியின் முன்னாள் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ மூலம் பதவிக்கு வந்தவர்கள். எனவே, அவர்களில் பெரும்பாலானோர் தற்போது வரை அவருக்கு விசுவாசமாகவே இருக்கின்றனர்.
 
மேயர் சரவணன் பதவிக்கு வந்த பிறகு, அவருக்கும், அப்துல் வகாபுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இவர்களுடைய மோதல் போக்கால் எம்எல்ஏ ஆதரவு திமுக கவுன்சிலர்கள், மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேயர் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தும், வளர்ச்சிப் பணிகளை முறையாக செய்யவில்லை என்று கூறியும் திமுக கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தினர்.
 
இந்நிலையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் திமுக MLA அப்துல் வகாப் தலைமையில் திமுக கவுன்சிலர்கள், சகல வசதிகளுடன் காரில் வெளியூருக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.