வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (13:10 IST)

காளியம்மன் கழுத்தில் இருந்த 15 பவுன் தாலி சங்கிலி திருட்டு – தொட்டியம் மக்கள் அதிர்ச்சி!

Kaliyamman temple
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பங்குனி மாதம் திருத்தேர் உற்சவ விழா வருடம் தோறும்  நடைபெறுவது வழக்கம்.


 
இந்த திருவிழாவின் போது இரண்டு மிகப்பெரிய தேர்களை பக்தர்கள் தோளிலும் தலையிலும் சுமந்து கொண்டு வீதி உலா வருவர். மதுர காளியம்மன் தினசரி மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அழகுடன் காட்சியளிப்பார்.

அப்போது சுவாமியின் கழுத்தில்15 பவுன் மதிப்பில் தாலி பொட்டு, கருகமணி, தாலி குண்டு, மாங்கல்யம்,தங்க தாலி சங்கிலி ஆகியவை அணிவிக்கப்பட்டிருக்கும்.

 வழக்கம் போல நேற்று கோவில் பூசாரி மருதை பூஜைகளை செய்து வந்த நிலையில் ஒரு குடும்பத்தினர் சுவாமி முன்பு அமர்ந்து பிரார்த்தனை செய்துள்ளனர்.

கோயில் பூசாரி மருதை மடப்பள்ளிக்கு சென்று பொங்கல் வைத்துவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது மதுரை காளியம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கத்தால் ஆன தாலி சங்கிலி திருட்டுப் போயிருந்தது.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் பூசாரி மருதை தெரிவித்ததையடுத்து மதுரை காளியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விஜய் ஆனந்த், தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் கணவன், மனைவி குழந்தையுடன் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற பின்னர் தான் தாலி சங்கிலி திருட்டுப் போய் இருப்பதும், திருடிவிட்டு  காரில் ஏறி சென்றுள்ளதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காளியம்மன் கழுத்தில் இருந்த தாலியை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அம்மன் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி மாங்கல்யம் ஆகியவை  திருட்டுப்போன சம்பவம் அப்பகுதி பக்தர்கள அதிர்ச்சியும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.