1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வியாழன், 18 பிப்ரவரி 2016 (18:28 IST)

திருப்பதிக்கு சென்ற 10 தமிழர்கள் கைது: இன்னொரு விசாரணை?

திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற தூத்துக்குடியை சேர்ந்த 10 பேரை செம்மரம் கடத்தியதாக கூறி ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



 

 
தூத்துக்குடி மாவட்டம் அம்பலச்சேரி கிராமத்தை சேர்ந்த சண்முகவேல், முருகன், வேல்முருகன், உள்ளிட்ட 10 பேர் கடந்த 15ஆம் தேதி ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்து விட்டு காரில் வீட்டுக்கு திரும்பிய போது, ஆந்திரா எல்லையில் இருக்கும் சோதனை சாவடியில் 10 பேரையும், செம்மரம் கடத்த வந்ததாக கூறி, ஆந்திரா வனத்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது. தற்போது, வெளியாகி உள்ள விசாரணை திரைப்படம் பாணியில் தமிழர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
 
கடந்த 16ஆம் தேதியன்று அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், ஆனால், இன்றுதான் எங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் கைது செய்யப்பட்ட பெற்றோர்களும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அவர்களது பெற்றோர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து 10 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்
 
மேலும், செம்மரம் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை விடுவிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.