1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 16 ஜூன் 2016 (15:48 IST)

1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.200​ஐ தாண்டிவிடும் - எச்சரிக்கும் ராமதாஸ்

கச்சா எண்ணெய் விலை முந்தைய உச்சத்தை தொட்டால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.200​ஐ தாண்டிவிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் ஒருமுறை உயர்த்தியுள்ளன. கடந்த 100 நாட்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழாவது விலை உயர்வு இதுவாகும். மக்களின் பொருளாதார நெருக்கடியை உணராமல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய்  நிறுவனங்களும், மத்திய அரசும் தொடர்ந்து உயர்த்தி வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
 
எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள விலை உயர்வின்  காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 11 காசுகள் அதிகரித்து 65.15 ரூபாயாகவும், டீசல் விலை ரூ.1.34 அதிகரித்து 56.78 ரூபாயாகவும் உள்ளது.
 
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்றவகையில் தான் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், கடந்த 15 நாட்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கவில்லை.
 
கடந்த மே மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த 15 நாட்களில் கச்சா எண்ணெயின் சராசரி விலை 46.53 டாலராக இருந்தது. ஜூன் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த 15 நாட்களில் கச்சா எண்ணெயின் சராசரி விலை 46.52 டாலராக உள்ளது.
 
ஒப்பீட்டளவில் கடந்த 15 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 0.01 டாலர் குறைந்துள்ள நிலையில், அதற்கு மாறாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது எந்த வகையிலும் சரியல்ல. அதுமட்டுமின்றி, கச்சா எண்ணெய் விலையில் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுவதாக வைத்துக்கொண்டால் இரு எரிபொருட்களின் விலைகளும் ஒரே அளவிலோ அல்லது ஒரே விகிதத்திலோ தான் உயர்த்தப்பட வேண்டும்.
 
ஆனால், பெட்ரோல் விலை வரிகளுடன் சேர்த்து 11 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டீசல் ரூ.1.34 உயர்த்தப்பட்டிருப்பது எந்த அடிப்படையில் என்பதை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் விளக்க வேண்டும்.
 
ஏற்கனவே பலமுறை நான் கூறியவாறு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பயனை நாட்டு மக்களுக்கு அளிக்காமல், கடந்த 2014 நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை பெட்ரோல் மீதான கலால் வரியை 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,46,838 கோடி கூடுதல் வருவாயை மத்திய அரசு தேடிக்கொண்டது.
 
இப்போதும் கூட கலால் வரியை ஓரளவு குறைப்பதன் மூலம் இந்த விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்கலாம். இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக கிடைக்கும் வருவாய் 30 முதல் 40 விழுக்காடு வரை குறையுமே தவிர, எந்த வகையிலும் இழப்பு ஏற்பட்டுவிடாது.
 
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் இப்போது கடைபிடிக்கும் அணுகுமுறையை தொடர்ந்தால் மக்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு மோசமான நிலை ஏற்படும். உதாரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை எப்போதும் இருந்திராத அளவுக்கு ஒரு பீப்பாய் 147 அமெரிக்க டாலர் என்ற விலையை தொட்டது.
 
அப்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73 என்ற அளவிலேயே இருந்தது. ஆனால், கச்சா எண்ணெய் விலை இப்போது அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக 46.52 டாலராக இருக்கும் போதே ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.65.15க்கு விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை முந்தைய உச்சத்தை தொட்டால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.200​ஐ தாண்டிவிடும்.
 
கடந்த 4 மாதங்களாக எரிபொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ளன. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும்.
 
தக்காளி விலை ஏற்கனவே 100 ரூபாயை தாண்டி விட்ட நிலையில் அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரிக்கும். மற்ற காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் அதிகரித்தால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும். இதை மனதில் கொண்டு பெட்ரோல், டீசல் விலைகளை முந்தைய நிலைக்கே குறைவதற்கு வசதியாக கடந்த சில ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட கலால் வரி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.