7 நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது – வீட்டிற்குள் அடங்காத மக்கள்
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஏழு நாட்கள் ஆகியுள்ள நிலையில் மக்கள் கூட்டம் இன்னமும் சாலைகளில் திரள்வது அபாயத்தை ஏற்படுத்துவதாக மாநில அரசுகள் அச்சத்தில் உள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் மாவட்ட எல்லைகள் உட்பட மூடப்பட்டுள்ளது. மக்கள் அவசிய தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என அரசு வலியுறுத்தியுள்ள போதிலும் சாலைகளில் மக்கள் கூட்டம் குறைவில்லாமல் உள்ளது.
இன்று சென்னை பாடி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு மக்கள் கூட்டம் கூடியுள்ளது மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த ஏழு நாட்களில் தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,08,922 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 8 ஆயிரம் வாகனங்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆனாலும் இன்னமும் சாலைகளில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுவதால் பெரும் அபாயங்களை சந்திக்க நேரிடலாம் என மருத்துவ நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் வீடுகளுக்கு அடங்காத வரை எத்தனை நாட்கள் ஊரடங்கு பிறப்பித்தாலும் அதனால் பயன் இருக்கப்போவதில்லை என சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.