விருதுநகரில் காவல்துறையினர் வைகோவுடன் வாய் தகராறு - மதிமுகவினர் சாலை மறியல்

Vaiko road block protest
Last Modified திங்கள், 31 மார்ச் 2014 (18:23 IST)
விருதுநகர் தொகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற வைகோவின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்ததால் காவல்துறையினருக்கும், வைகோவுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் மதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Vaiko road block protest
விருதுநகர் அருகே உள்ள பெரிய வெள்ளிக்குளத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பறக்கும் படையை சேர்ந்த தேவராஜ் தலைமையில் காவல்துறையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
 
அப்போது விருதுநகர் தொகுதியில் மதிமுக வேட்பாளர் வைகோ, அருப்புக்கோட்டைக்கு பிரச்சாரம் செய்ய வாகனத்தில் சென்றார். அப்போது அவருடன் தொண்டர்களும் சென்றனர். அங்கு நின்ற காவல்துறையினர் வாகனத்தை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
 
இதையொட்டி மதிமுக தொண்டர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
 
மதிமுக தொண்டர்களுடன் காவல்துறையினர் தகராறு செய்ததை கண்டித்து வைகோ பிரச்சார வேனிலிருந்து கீழே இறங்கி அருப்புக்கோட்டை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினார். அவருடன் மதிமுக தொண்டர்களும் மறியலில் ஈடுபட்டனர். தரக்குறைவாக பேசிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதுபற்றி தகவல் அறிந்ததும் சூலக்கரை ஆய்வாளர் அன்புராஜன், ஆர்.டி.ஓ. உதயகுமார் ஆகியோர் விரைந்து சென்று மறியல் நடத்திய வைகோவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 40 நிமிட நேரம் மறியல் போராட்டம் நடந்தது.
 
அதன் பின்பு வைகோ அங்கிருந்து பிரச்சாரம் செய்ய அருப்புக்கோட்டை சென்று விட்டார். ஆனால் மதிமுக தொண்டர்கள் சாலையோரம் நின்று கொண்டு காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :