திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மனோதத்துவம்
Written By Murugan
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2015 (18:55 IST)

குழந்தைகளுக்கு தனி படுக்கையறை தேவையா?

பொதுவாக குழந்தைகளுக்கு சமூகப் பாதுகாப்பு என்பது இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் மிகமிக அவசியம்.


 
 
ஒரு குழந்தை 5 வயதை எட்டி விட்டாலே-அதாவது ஓரளவுக்கு விவரம் தெரியத் தொடங்கியதும், அது ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு தாய்-தந்தை, உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் என்ற கட்டமைப்புடன் கூடிய பாதுகாப்பு இருக்கிறது என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.
 
தவிர, குழந்தைகளை தைரியசாலிகளாகவும், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும் வளர்க்க வேண்டியதும் அவசியம். அதற்கு அவர்களை குழந்தைப் பருவத்திலேயே தயார்படுத்த வேண்டும்.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் குழந்தைகள் 4 அல்லது 5 வயதாகி விட்டாலே, அவர்களுக்கென்று தனி அறை, தூங்குவதற்கு தனி பெட், படிப்பதற்கு, டி.வி பார்ப்பதற்கு சுதந்திரம் என சுயமாக அவர்கள் வேலைகளை அவர்களே பார்த்துக் கொள்ள வழிவகை செய்கிறார்கள்.
 
குழந்தைகளுக்கென்று தனி பெட்ரூம் கொடுப்பதால், தன்னிச்சையாக அவர்களால் செயல்படக்கூடிய மனோநிலை ஏற்படுகிறது. அச்சமின்றி அவர்கள் தூங்கக்கூடிய சூழல் காரணமாக, வெளியில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
அதேநேரத்தில் அதிக சுதந்திரம் காரணமாக பெற்றோரின் கண்காணிப்பில்லாத நிலையும் ஏற்படுகிறது. அதுவே ஒரு குறிப்பிட்ட வயதில், அறியாப் பருவத்தில் தவறிழைக்கவும் தூண்டுவதாக அந்த தகவல் கூறுகிறது. 
 
குழந்தைகளை தனி அறையில் விடுவதன் மூலம் சாதகங்கள் இருப்பது போல் பாதகங்களும் இருப்பதை மறுக்க முடியாது.
 
அமெரிக்காவைப் பொருத்தவரை 13 வயதை எட்டிய பதினெண் பருவத்தினர் (இருபாலரும்) தங்களுக்கென்று துணையைத் தேடிக் கொள்ளும் நிலை உள்ளது. டேட்டிங் போன்ற நண்பர்களுடன் ஊர் சுற்றுவதற்கும் அந்த சுதந்திரம் வித்திடுகிறது. அங்குள்ள வசதி, வாய்ப்புகளும், சட்ட- திட்டங்களும் அப்படி இருப்பதால் மிகச்சிறிய வயதிலேயே அதாவது 20 வயதை எட்டுவதற்குள்ளாகவே பாலுறவு வைத்துக் கொள்ள நேரிடுவதாகத் தெரியவந்துள்ளது.
 
சரியான நபரைத் துணையாகத் தேர்வு செய்தல், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்நாட்டு கலாச்சாரம் எல்லாம் அமெரிக்காவில் காற்றில் பறக்கவிட்ட கதைதான் என்பது பலருக்கும் தெரியும்.
 
இப்படியிருக்க, நம்மூரில் குழந்தைகளுக்கு தனி அறை என்பது பற்றி எப்படி யோசிக்க முடியும்?
 
சென்னை போன்ற பெருநகரங்களில், புறநகர்ப் பகுதிகளை நோக்கி மக்கள் குடிபெயர்ந்து விட்ட நிலையில், தங்களின் மகன்-மகள்களை கல்லூரிக்கு அனுப்பி விட்டு பெற்றோர் கவலைப்பட வேண்டிய சூழ்நிலைதான் உள்ளது.
 
அதிலும் கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கும்பட்சத்தில், அந்தக் குழந்தைகளின் கண்காணிப்பு இன்னமும் கேள்விக்குறியாகிறது. எனவே சமுதாய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய இந்தியாவில் குழந்தைகளுக்கு தனி அறை, தனி பெட்ரூம் என்பதெல்லாம் அவர்கள் 15 வயதிற்கு பிறகே சாத்தியமாகும்.
 
அப்படி தனி அறையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தாலும், பெற்றோரின் தொடர் கண்காணிப்பும் அவசியமாகிறது. அதற்காக மகளோ-மகனோ அவர்களை சந்தேகக் கண்களோடு பார்க்க வேண்டும் என்பதல்ல.
 
குழந்தைகள் பதினெண் பருவத்தை அடைந்ததும், எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம் அவர்களுடன் பேசுங்கள். முடிந்தால், அவர்களின் ரசனையோடு இணைந்து, சரி எது, தவறு எது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். தாயோ, தந்தையோ நண்பர்களைப் போல் பழகுங்கள். அப்போதுதான் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், கஷ்டங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வருவார்கள்.
 
எப்போது வீட்டிற்கு வருகிறார்கள்? தொலைபேசியில் எவ்வளவு நேரம் பேசுகிறார்கள்? செல்போனில் யாருடன் அதிக நேரம் பேசுகிறார்கள்? 
 
வழக்கமான மகிழ்ச்சியுடன் பள்ளி - கல்லூரிக்கு சென்று வருகிறார்களா? என்பதை குழந்தைகளுக்கு தெரியாமல் கண்காணிக்கலாம். முடிந்தால், குழந்தைகளின் நெருங்கிய நண்பர்களையும் அவ்வப்போது அழைத்துப் பேசலாம். தேவைப்பட்டால் உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு படிப்பு தொடர்பாக மட்டுமின்றி நன்னடத்தை பற்றியும் கேட்டறியுங்கள்.
 
ஏதாவது புகார் இருப்பது தெரிய வரும்பட்சத்தில், அதற்கான காரணங்களை அறிந்து, பக்குவமாக உங்கள் குழந்தைகளிடம் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் எடுத்துக் கூறுங்கள்.
 
இப்படிச் செய்வதால், வெளிநாடுகளில் நடைபெறுவதைப் போல தகாத உறவு, தவறானவர்களுடன் தொடர்பு போன்றவை ஏற்படாத வகையில் உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும். இதன் மூலம் அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் உருவாக்கிக் கொடுக்க முடியும். குழந்தைகளின் எதிர்காலம்தானே நமது குறிக்கோள்? 
 
அதைவிட நமக்கு என்னங்க வேண்டும்!