பாரதியின் கண்ணம்மா என்னையும் காதலிக்கிறாள்!....


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 17 மே 2016 (18:36 IST)
அவள் இன்னும் என்னையும்கூட காதலிக்கிறாள்..
 
பிரசவிக்காத குழந்தையாகிய சிசுவை
தனது வயிற்றின் இளஞ்சூட்டில்
கதகதப்போடு சுமந்து காக்கும்
நேசமிக்க தாயாக என்னை சுமக்கிறாள்..
 
 
கல்லும், முள்ளுமான கடின பாதைகளைக் கடந்து
காடு, மலைகளில் உருண்டோடி
கடலில் கலக்கும் நதியென
அவள் என்னுள் கலந்து விடுகிறாள்....
 
இந்த உலகில் எவரும்
இதுவரை கண்டடையாத
ஒரு அணுவின் துகளின் அடியில் தங்கியிருக்கிறாள்..
 

 
இதுவரை எவரும் சொல்லாத ஒரு சொல்லின்
கனத்தை சுமந்து கொண்டிருக்கிறாள்..
 
இதுவரை எவரும் எழுதாத எழுத்துருவின்
மடியில் படுத்துறங்குகிறாள்..
 
எவரும் கேட்டிடாத இன்னிசையை
எனது துயர் மிகுந்த இரவுகளில்
இசைத்துக் கொண்டிருக்கிறாள்...
 

 
கொடுங்கனவுகள் என்னை துரத்தவிடாது
எவரும் முகர்ந்திடாத
இனிய நறுமணத்தின் வாசத்தோடு
இறுகக் கட்டியணைத்துக் கொண்டிருகிறாள்..
 
நான் துரோகங்களின் வேதனைகளில்,
வெம்பி வாடுகின்ற பொழுதுகளிலெல்லாம்
எவருமே தீண்டிடாத அறிய ஸ்பரிஸத்தோடு
தென்றலென என்னைத் தழுவிக்கொண்டு
முத்தங்களை அள்ளி வழங்குகிறாள்..
 
ஆனாலும், நான் நானாக இருப்பதை தவிர
என்னிடம் அவள் வேறெதையும் கேட்டதில்லை...
 
பாரதியின் கண்ணம்மா
இன்னும் என்னையும்கூட காதலிக்கிறாள்....

 - லெனின் அகத்தியநாடன்
 


இதில் மேலும் படிக்கவும் :