1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன...?

குழந்தைப் பருவத்தில், சிறியதாக இருக்கும் எலும்புகள், வயது அதிகரிக்கும்போது பெரிதாகிறது. எலும்பின் இந்த வளர்ச்சிக்கு கால்சியம் சத்து அவசியம் தேவை. கால்சியத்தை எலும்புகள் கிரகிக்க வைட்டமின் டி தேவை. 
 

வைட்டமின் டி இல்லை என்றால், கால்சியம் கிரகிக்கப்படாமல் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். இதனால், எலும்புகள் பலவீனம் அடையும். வைட்டமின் டி உடலில் அதிகமாகவும் இருக்கக் கூடாது, குறைவாகவும் இருக்கக் கூடாது. 
 
வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து அதிக அளவிலும், சில வகை உணவில் இருந்து சிறிதளவும் கிடைக்கிறது.
 
எலும்பின் உறுதித்தன்மை குறையும். குழந்தைகளுக்கு, கால்சியம் சத்து கிடைக்காததால், எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும், எலும்பு முறையற்ற வகையில் வளரும். சில இடங்களில், விநோதமாக நீட்டிக்கொண்டும், சில இடங்களில் சுருங்கியும் காணப்படலாம்.
 
குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாட்டால் வரும் இந்த நோய்க்கு ‘ரிக்கெட்ஸ்’ என்று பெயர். கல்லீரல், கணையம், பெருங்குடல், மார்பகப் புற்றுநோய் போன்றவை வருவதற்கும் வைட்டமின் டி குறைபாடு ஒரு காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
 
பெரியவர்களுக்கு, எலும்புகள் முறையில்லாமல் வளரும் நோயான ஆஸ்டியோமலேசியா, எலும்பு அடர்த்திக் குறைதல் நோயான ஆஸ்டியோபொரோசிஸ் போன்ற நோய்கள் வரும். எலும்பு மூட்டு இணைப்புகளில் கீல்வாத நோயான ஆர்த்ரைடிஸ் வர வைட்டமின் டி குறைபாடு ஒரு முக்கியக் காரணம்.
 
ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவும் ஹார்மோன் இன்சுலின். இன்சுலின் சீராக சுரக்கக் காரணமான பான்கிரியாடிக்-பி எனும் செல், வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படும். இதனால், இன்சுலின் சுரப்பில் பிரச்சனை ஏற்பட்டு, சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருக்கிறது.