திங்கள், 25 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இயற்கையில் கிடைக்கும் கோவை இலையில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்

கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால்  ஆரோக்கியமான உடலைப் பெறலாம்.

 
கோவை இலைச்சாறு, கருஞ்சீரகப் பொடி 5 கிராம் சேர்த்து அரைத்து படை மீது பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்கவும்.  தொடர்ந்து பூசி வர குணமாகும். கோவை இலையில் கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. கோவை இலைகளை வேப்பெண்ணெய்யில் வதக்கி வீக்கத்தின் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம்  குறையும்.
 
தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து  வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.
 
கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும். சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும்  வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம். கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்.
 
கோவை இலையை கொதிக்கின்ற வெந்நீரில் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து வடிகட்டி கொடுக்க சிறுநீர் அடைப்பு குறையும். இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள்  மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.