பிரெஞ்சு மகாராணியும், பிரதமர் நரேந்திர மோடியும்: தோலுரிக்கும் சீத்தாராம் யெச்சூரி
சாப்பிடுவதற்கு ரொட்டிகள் இல்லாவிட்டால் என்ன? கேக் சாப்பிடுங்கள் என்று பிரெஞ்சு மகாராணி கூறியதை போல, பிரதமர் நரேந்திரமோடியின் அறிவிப்பு உள்ளது என சிபி[ஐ]எம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நாடாளுமன்றத்தில் கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் நேற்று புதனன்று [16-11-16] துவங்கியது. இப்பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளும் ஒத்திவைக்கப்பட்டு, ரூபாய் நோட்டு பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியதால் அரசு ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மாநிலங்களவை விவாதத்தில் பங்கேற்று பேசிய சீத்தாராம் யெச்சூரி, ”130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியநாட்டில் வெறும் 2.6 கோடி மக்கள் மட்டுமே கிரெடிட் கார்டுகள் வைத்துள்ளனர்.
பிரெஞ்சு புரட்சியின் போது அந்நாட்டின் மகாராணி மேரி ஆண்டோநிட்டே, சாப்பிடுவதற்கு ரொட்டிகள் இல்லை என்று கதறிய ஏழைகளை பார்த்து, கேக் சாப்பிடுங்களேன் என்று கூறியதை போல இன்றைக்கு பிரதமர் மோடி, ரூபாய் நோட்டுகள் இல்லாவிட்டால் என்ன, பிளாஸ்டிக் ரூபாய்களை பயன்படுத்துங்கள் என்கிறார்.
ரோமானிய மன்னரை பற்றி அவரது அவையிலிருந்த செனட் உறுப்பினர் ஒருவர், இப்படி கூறுவார்: ரோமைப் பற்றி நமது மன்னருக்கு நன்றாக தெரியும். ரோம் என்றால் மாபெரும் மக்கள் கூட்டம். அந்த மக்கள் கூட்டத்தின் முன்பு கண்கட்டி வித்தைகள் காட்டி, அவர்களது கவனத்தை திசைதிருப்புவார்.
அவர்கள் அதில் மயங்கி, உண்மைகளை தேடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களது சுதந்திரத்தை பறித்துக் கொள்வார். ரோம் நகரத்து இதயத் துடிப்பு என்பது இந்த மாபெரும் செனட் சபையின் மார்பிள் கற்களில் இல்லை; இந்த இதய துடிப்பு மக்கள் கூட்டம் அமர்ந்திருக்கிற மண்ணில் இருக்கிறது. அவர்கள் மன்னனின் புகழைப் பாடிக் கொண்டு இருக்கும் வேளையில், மன்னன் அவர்களுக்கு மரணத்தை பரிசளித்தான்" என்று சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.
மேலும் பிரதமரை வாழ்த்தி, ‘பேடிஎம்’ என்ற நிறுவனத்தின் சார்பில் முழு பக்க விளம்பரம் அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய யெச்சூரி, "இவர்கள் சொல்வது ஜெய்ஹிந்த் அல்ல; ஜியோஹிந்த்" என சாடினார். பேடிஎம் நிறுவனமும் ஜியோ நிறுவனமும் அம்பானியின் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.