மதிய உணவுக்கு கூட ஆதார் எண் கேட்பதா? மத்திய அரசுக்கு கேரள முதல்வர் கண்டனம்
ஆதார் எண் என்பது தற்போது கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் கேட்கப்பட்டு வருகிறது. கேஸ் மானியம் முதல் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வது வரை கண்டிப்பாக ஆதார் எண் தேவை என்று மத்திய அரசு படிப்படியாக அறிவித்து வரும் நிலையில் தற்போது , மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் தங்கள் ஆதார் எண்ணை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. மேலும் இதற்கான கால அளவாக வரும் ஜூன் 30ஆம் தேதியை மத்திய அரசு குறித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் இதற்கான காரணம் குறித்தும் கேரள முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்தியஅரசின் அந்த நடவடிக்கையால் மாணவர்கள் மதிய உணவு பெறுவதில் தடை ஏற்படும் என்றும் மாணவர்களின் பசியில் மத்திய அரசு கைவைப்பது நல்லதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்
கேரள முதல்வரின் எதிர்ப்பை தொடர்ந்து கேரளா உள்பட பல்வேறு பகுதி மக்கள் நாடு முழுவதும் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் விரைவில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.