திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி; 4.23 லட்சம் இலவச டிக்கெட்டுகள் வழங்க திட்டம்!
திருப்பதியில் மார்கழி மாதத்தில் தொடங்கும் வைகுண்ட ஏகாதசி நாளில் வழங்க இலவச தரிசன டிக்கெட்டுகள் தயாராகி வருகின்றன.
மார்கழி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஏகாதசியில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருமாள் கோவில்களில் மிக பிரசித்தம். முக்கியமாக திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் செல்வது வாடிக்கை.
இந்த ஆண்டு திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 22ம் தேதி தொடங்கி ஜனவரி 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக வெளியிடப்பட்ட ரூ300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் சுமார் 2.25 லட்சம் டிக்கெட்டுகளும் ஒரு மணி நேரத்திற்குள் விற்று தீர்ந்துள்ளன.
இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து பேசிய திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி “சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் பெற்றவர்கள் தவிர ஏனைய பக்தர்களும் வைகுண்ட வாசல் வழியாக சென்று சாமியை தரிசிக்க டிசம்பர் 22 முதல் ஜனவரி 1 வரை 10 நாட்களுக்கு மொத்தம் 4,23,500 இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியின் 9 மையங்களில் வழங்கப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நித்திய அன்னதானம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினசரி 7 லட்சம் லட்டுகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K