1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified திங்கள், 27 மார்ச் 2023 (08:48 IST)

சாவர்க்கரை தப்பா பேசினா.. கூட்டணி அவ்ளோதான்..! – ராகுல்காந்திக்கு எச்சரிக்கை!

Uddav
தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, சாவர்க்கர் குறித்து பேசியதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான எம்.பி ராகுல்காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதை தொடர்ந்து இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல்காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கூறப்பட்டது.

இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல்காந்தி “மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல. ராகுல்காந்தி. காந்தி மன்னிப்பு கேட்க மாட்டான்” என பேசியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா கூட்டணி தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ராகுலின் சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ள உத்தவ் தாக்கரே “அந்தமான் சிறையில் சாவர்க்கர் 14 ஆண்டுகள் பல கொடுமைகளை அனுபவித்தார். அதுவும் ஒருவிதமான தியாகம்தான். சாவர்க்கர் எங்கள் கடவுள். எங்கள் கடவுளை அவமரியாதை செய்வதை நாங்கள் சகித்துக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் – சிவசேனா கூட்டணி திட்டமிடப்பட்டு வரும் நிலையில் ராகுல்காந்தியின் இந்த பேச்சு கூட்டணியை பாதிக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K