வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 18 மே 2024 (13:00 IST)

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

Bibav Kumar
தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரின் பேரில், அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
 
மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 
 
இதையடுத்து வீடு திரும்பிய முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்திப்பதற்காக அக்கட்சியின் எம்பியான ஸ்வாதி மாலிவால் அவரது வீட்டிற்கு கடந்த மே 13ம் தேதி சென்றார். அப்போது முதலமைச்சரின் உதவியாளர் பிபவ் குமார், தன்னை தாக்கியதாக டெல்லி போலீசாரிடம் அவர் புகார் அளித்திருந்தார்.
 
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே ஸ்வாதி மாலிவால் இது போன்று செய்து வருகிறார் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டி இருந்தது.

 
இதற்கிடையே ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரின் பேரில், டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் இன்று கைது செய்தனர்.