குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 6 முதலமைச்சர்கள்! – என்ன செய்ய போகிறது மத்திய அரசு?
இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் மாற்றங்களுக்கு பலமான எதிர்ப்புகள் உருவாகியுள்ள நிலையில் ஆறு மாநில் முதல்வர்கள் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் பலமான எதிர்ப்பையும் மீறி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் வலுபெற்று வருகின்றன. போராட்டத்தை அடக்க இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை சட்ட மசோதாவை ஏற்றுக்கொள்ள முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், பஞ்சாப் முதல்வர் அமரேந்தர் சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசுகளின் எதிர்ப்புகளுக்கு பதிலளித்துள்ள மத்திய அரசு இந்த சட்ட திருத்தத்தில் மாநில அரசுகள் இணைக்கப்படவில்லை என்றும், நாட்டின் பாதுகாப்பு கருதி கொண்டுவரப்படும் சட்டங்கள் நாடு முழுவதற்கும் பொருந்தும் என்பதால் இதை பின்பற்றுவதை மாநில அரசுகள் மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளது.
ஆனால் 1949ம் ஆண்டு சட்ட விதி 256ன் படி மாநில அரசுகளின் அதிகாரம் மற்றும் உரிமைகளில் பாராளுமன்றத்தின் தலையீடு ஏற்பட்டால் நீதிமன்றத்தை அணுக வாய்ப்பிருப்பதாக சட்ட நிபுணர்களிடையே பேச்சு அடிப்படுகிறது. எனவே இந்த குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் மாநில அரசுகள் இந்த சட்டவிதியை பயன்படுத்தி நீதிமன்றத்தை நாட வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.