1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (14:32 IST)

வகுப்பறையில் ஆசிரியரை குத்திக் கொலை செய்த மாணவர்கள் : டெல்லியில் அதிர்ச்சி

வகுப்பறையில் ஆசிரியரை குத்திக் கொலை செய்த மாணவர்கள் : டெல்லியில் அதிர்ச்சி

வகுப்பறையில் ஆசிரியர் ஒருவரை இரு மாணவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மேற்கு டெல்லியில், நங்கோலி என்னும் இடத்தில் உள்ள ஒரு மாணவர் உயர் நிலைப்பள்ளியில் நேற்று ஒரு தேர்வு நடந்து கொண்டிருந்தது. ஒரு வகுப்பில் முகேஷ் குமார் (45) என்ற ஹிந்தி ஆசிரியர் கண்காணிபாளராக நியமிக்கப்பட்டிருந்தார். 
 
அப்போது, அங்கு அதே பள்ளியில் +2 படிக்கும் ஒரு மாணவன், அந்த வகுப்பில் நுழைந்து அந்த ஆசிரியரை தாக்கியுள்ளான். அந்த மாணவனோடு சேர்ந்து, அதே அறையில் இருந்த இன்னொரு மாணவனும், அந்த ஆசிரியரை தாக்கியுள்ளான். அவர்கள் இருவரும் தாக்கியதில் ஆசிரியர் முகேஷ் தடுமாறி விழுந்தார். அப்போது ஒரு மாணவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினான். அதன்பின் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணம் அடைந்தார். தவறான நடவடிக்கை காரணமாக, அந்த ஆசிரியரின் வகுப்பில் இருந்த 6 மாணவர்களின் மீது நடவடிக்கை எடுத்ததால், அந்த மாணவர்கள், அவரின் மீது கோபமாய் இருந்ததாக தெரிகிறது.
 
அந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கடந்த சில நாட்களாக தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக, முகேஷ் ஏற்கனவே அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கூறியிருந்தார். இந்நிலையில்தான்,  2 மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரழந்துள்ளார்.
 
அந்த இரு மாணவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களில் ஒருவனுக்கு 18 வயது எனவும், இன்னொருவனுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் 18 வயது ஆக உள்ளது என்றும் போலீசார் கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மரணம் அடைந்த முகேஷின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.