1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2017 (10:36 IST)

’இனிமேல் ஜாதி சொல்லி வாக்கு சேகரிக்க முடியாதா?’

தேர்தலின் போது ஜாதி, மதம், மொழி, இனத்தைப் பயன்படுத்தி வாக்குச் சேகரிப்பது குற்றச் செயல் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.


 

1995ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான மனோகர் ஜோஷி, மதரீதியான பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால், சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றதுடன், முதல்வராகவும் ஆனார்.

மனோகர் ஜோஷியின் இந்த பிரச்சாரம், மதச்சார்பற்ற தன்மையை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியல் சாசனத்திற்கு நடவடிக்கை எதிரானது என குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், அவர் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று என்.பி. பாட்டீல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, “இந்துத்துவா அல்லது இந்து மதம் என்பது, இந்திய துணைக்கண்ட மக்களின் வாழ்க்கை முறை” என்றும், “அது ஒரு மனநிலை; என்பதால், இதன் அடிப்படையில் வாக்குகளைச் சேகரிப்பது குற்றமல்ல” என்றும் தீர்ப்பளித்தது.

நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வின் தீர்ப்பை மறுசீராய்வுக்கு உள்ளாக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் மற்றும் சில தனி நபர்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

எனினும் 20 ஆண்டுகளாக இந்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன. அதன் பின்னர், கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில், தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான ஏழு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

ஏழு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்த நிலையில், அவர்களில் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், எம்.பி. லோகூர், எஸ்.ஏ. பாப்டே, எல்.என். ராவ் உள்ளிட்ட நான்கு நீதிபதிகள், “சாதி, மத, மொழி, இனம், சமூக அடிப்படையில் வாக்குச் சேகரிப்பது தேர்தல் விதிகளின்படி குற்றமாகும்” என்று தீர்ப்பளித்தனர்.

“மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(3)-ல் தேர்தல் ஊழல் தொடர்பான விவரிப்பில் ‘மதம்’ என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளதால், மதத்தின் பெயரால் வாக்குச் சேகரிப்பதும் ஊழல்தான்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால், அதே அமர்வில் இருந்த யு.யு.லலித், ஏ.கே. கோயல், டி.ஒய். சந்திரசூட் ஆகிய மூன்று நீதிபதிகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(3)-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘மதம்’ என்ற வார்த்தை வேட்பாளரின் மதத்தைக் குறிப்பதாகும் என்று வேறு ஒரு வியாக்யானத்தை முன்வைத்தனர்.

எனினும், பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்து அடிப்படையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி, மதத்தைப் பயன்படுத்துவது முறைகேடுதான் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும், இந்தத் தீர்ப்பில், “தேர்தல் என்பதே ஒரு மதச்சார்பற்ற நடவடிக்கைதான் என்பதால், தேர்தல் களமும், தேர்தல் நடைமுறைகளும் மதச்சார்பற்றதாகவே இருக்க வேண்டும்” என நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

மேலும், “மதத்தைப் பின்பற்றுவது ஒருவரின் தனிப்பட்ட விஷயம்; இருப்பினும் தேர்தலில் மதத்தை நுழைக்க முடியாது; ஜாதி, மதத்தின் பெயரில் தேர்தலில் வாக்குச் சேகரிப்பது சட்ட விரோதம் என்பதுடன்; அது ஒரு குற்றச் செயலுமாகும்; அச்செயலில் ஈடுபடுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்று எச்சரித்துள்ளனர்.