சமூக வலைதளத்தில் குவியும் அரசியல் கட்சிகள் : ’சபாஷ் சரியான போட்டி’
அடுத்த வருடம் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதிருந்தே பல முக்கிய கட்சிகள் வாக்காளர்களைக் கவர திட்டம் தீட்டி வருகின்றனர். இதில் இணையதளத்தின் வாயிலாக குறிப்பாக இளைஞர்களைக் கவர காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகள் முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சில பாடங்களையும் , காங்கிரஸுக்கு புது படிப்பினைகளையும் கொடுத்துள்ளன.
இந்தியாவில் 900 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இதில் பாதிக்கு மேற்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் உபயோகிப்பவர்கள் தான்.இதில் 300 மில்லியன் மக்கள் பேஸ்புக் பயனாளர்களும், 200 மில்லியன் பேர் வாட்ஸ்அப் பயனாளர்களும் உள்ளனர். டிவிட்டர் பயனாளர்களும் அதிக அளவில் உள்ளனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு சமூக வலைதளத்தின் பங்களிப்பு அதிகளவில் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதனையடுத்து பல பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் முழுவீச்சுடன் வலைதளங்களில் விளம்பரம் செய்யவும், வேகமாக செய்திகளைப் பகிரும் விதத்தில் செயல்படப் போவதாகவும் தகவல் வெளியாகின்றன.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலின் போது காங்கிரஸ் 90,000 வாட்ஸ் அப் குரூப்கள் மூலமும் பாஜக 100,000 வாட்ஸ் அப் குரூப்கள் மூலமும் பிரசாரம் மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.