ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் இளங்கலை பட்டப்படிப்பு மாணவி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதில், கிட்டத்தட்ட 90 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். லாஞ்சிபெர்னா பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, மாணவியை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த 25 வயது இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது. இரண்டாம் ஆண்டு படிக்கும் அந்த மாணவி, ஒரு தொலைபேசி அழைப்பில் மிரட்டப்பட்ட பின்னரே தீக்குளிக்க முயன்றதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். மாணவி தற்போது ரூர்கேலாவில் உள்ள இஸ்பாத் பொது மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒடிசாவில் கடந்த ஆறு மாதங்களில் பதிவாகும் ஐந்தாவது துயர சம்பவம் இதுவாகும். ஜூலை மாதம் பாலியல் துன்புறுத்தலால் பாலசோர் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை தொடர்ந்து, பூரி மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களிலும் மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் காரணமாக மாணவிகள் உயிரிழந்தனர். இந்த தொடர் சம்பவங்கள் மாநிலத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்த தீவிரமான கவலைகளை எழுப்பியுள்ளது. மாணவிக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவும், இதுபோன்ற சோகங்களை தடுக்கவும் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. Edited by Siva