மோடியின் ரூபாய் மந்திரம் - பின்னணி என்ன?

லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 9 நவம்பர் 2016 (13:40 IST)
500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்து மோடி அறிவித்துள்ளார். ATM வாசல்களில் பெரும் கூட்டம். பலர் அல்லாடுகிறார்கள். ஏனெனில் இன்றைய நிலவரத்தில் 500 அல்லது 1000 என்பது அன்றாட செலவு என்பது இயல்பாகிவிட்டது.


கருப்புப் பணத்தைச் சேர்க்க அல்ல, மாறாக, வசதிக்காக 500-1000 தாள்களை மக்கள் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் நடுததர வர்க்கமாக கூட இருக்கலாம். ஆனால், பணக்காரர்கள் அல்ல. இன்றைய நிலையிர் 500 ரூபாய் மட்டும் கையில் வைத்துள்ள ஒருவர் அதனைக் கொடுத்து பொருள் வாங்க முடியாது.

‘இந்த 500- 1000 ஒழிப்பின் மூலம் கருப்புப் பணம் செல்லாதது ஆகிவிடும் என்று மோடி சொல்கிறார். ஆனால், கருப்புப் பணக்காரர்கள், நம்ம ஊர் ஜெயலலிதா உள்பட நோட்டுகளை சொத்துக்களில் முதலீடு செய்கின்றனர். கொடநாடு முதல் உலகின் வேறு நாடுகளில் சொத்துக்களாக மாற்றி சுகமாக வாழ்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து தப்பி ஓடியதாகச் சொல்லப்படும் சாராய அதிபர் விஜய் மல்லையா பிரிட்டனில் மேம்பட்ட சொகுசு - திமிறுடன் வாழ முடிகிறது. அவர் போன்ற சில 100 பணக்காரர்களின் சொத்துக்களையும் வருமானத்தையும் மதிப்பிட்டு திருட்டுச் சொத்துக்களைக் கைப்பற்ற வக்கற்ற மோடி, அனைத்து மக்களையும் அலைக்கழிக்கும் பண ஒழிப்பில் புரட்சி வேடம் போடுகிறார்.

இன்றைய நிலையில், 500 - 1000 மக்களின் அன்றாட செலவு என்றான நிலையில், பெரும் துன்பத்திற்கு ஆளாவது நடுத்தர, கீழ் நடுத்தர மக்களே.

ஆனால், நாம் ஒரு கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. சுவிஸ் பணத்தை மீட்டு குடும்பம் ஒன்றுக்கு 15 லட்சம் தருவேன் என்ற மோடியின் கதை என்ன ஆயிற்று?

சரி. அதை விடுங்கள். 1000 ரூபாய் நோட்டு கள்ளப் பணத்திற்கு வழி வகுக்கிறது என்றால், 2000 ரூபாய் நோட்டு எதற்கு?

கூடுதல் பண மதிப்பை, 2000 ரூபாய் நோட்டை, கருப்புப் பணக்காரர்கள் அனுபவிக்க 500 என்ற தொகையை அன்றாடம் ஏழைகள் செலவழிக்க 2 வேறுபட்ட இந்தியாவிற்கான வழியா இது? அதாவது, சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஏழைகள் பயன்படுத்த பெரிய மதிப்புள்ள நோட்டுகளில் கள்ளப் பணத்தை பணக்காரர்கள் சேமிப்பதற்கான வழியா இது?

அல்லது, அம்பலப்படும் மோடியின் தகுதியை, உபி தேர்தலுக்கு முன்பு, உயர்த்திக்காட்டும், சர்ப்பரைஸ் ஸ்டைரைக்கா இது? அல்லது, சில நாட்களில், ரிவர்ஸ் கியர் போட்டு கள்ளப் பணக்காரர்களிடம் கமிஷன் பெறுவதற்கான திட்டமா இது?

அல்லது, மாட்டுக்கறி, முஸ்லீம் வெறுப்பு, பாக்கிஸ்தான் எதிர்ப்பு என்பது போன்ற விஷ(ய)ங்கள் பலன் தரவில்லை என்பதால், போடப்படும் முற்போக்கு வேடமா இது?

எப்படியிருந்தாலும், மோடி, மிகப் பெரிய கேடி. அவர் குஜராத்தில் செய்த ஊழல்கள் உலகறிந்தவை.

சரி. கருப்புப் பணக்காரர்களை ஒழிக்க நினைக்கும் மோடி அரசு, பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கி, பின்னர் திருப்பித் தராத முதல் 100 பணக்காரர்கள் பட்டியலை மறுப்பதேன்?

நவ தாராளவாதப் பொருளாதாரம் என்பது ஊழலின் ஊற்றுக் கண். அதன் தற்போதைய கதாநாயகன் -மோடி- கருப்புப் பணத்தின் எதிரியா? நிச்சயம் இல்லை.

ஆனால், ஒன்று உறுதி. அச்சா தின் (நல்ல நாள்) என்று உறுதி அளித்த மோடி தனது கெட்ட நாளை தேர்ந்தெடுத்துக் கொண்ட நாள் இது.

கட்டுரையாளார்: மதிவாணன் [CPI-ML மாவட்ட செயலாளர், மதுரை]


இதில் மேலும் படிக்கவும் :