நள்ளிரவில் தேர்தல் ஆணையர் நியமனமா? ராகுல் காந்தி கண்டனம்..!
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய தேர்வு குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடியது.
அப்போது, தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பெயர் தேர்வு செய்யப்பட்டதாகவும், குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்து விட்டதாகவும் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையரை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
ஆனால், இரவோடு இரவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று புதிய தேர்தல் ஆணையர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
"தேர்தல் ஆணையத்தின் அடிப்படையே எந்த தலையிடும் இல்லாமல் சுதந்திரமான முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி, நள்ளிரவில் தேர்தல் ஆணையரை தேர்வு செய்தது நேர்மை குறித்து கேள்விக்குறியாகிறது," என்று அவர் தெரிவித்துள்ளார்.
Edited by Siva